இந்தியாவில் ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 9,152ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 308 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 857 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஒடிஷா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து அந்த மாநில முதல்வர்களே உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை மத்திய அரசின் முடிவை பின்பற்றுவோம் என தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அப்போது ஊரடங்கை நீடிப்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் தொழில்கள், மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.