டெல்லி செங்கோட்டையில் 6வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார்.
இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இம்முறை அதிகமாக பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி. அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார்.
பிரதமர் மோடி 6வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசியக் கொடியை ஏற்றியதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சாதனையை சமன்செய்தார் நரேந்திரமோடி. இதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.