கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தற்போதைய சூழல் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. முன்னதாக இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷாவுடன் அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் காணொலியில் பங்கேற்றார். பின்னர் மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும், அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என அமித்ஷா கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது கவனம் செலுத்த செய்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.