கேமராவை நாடாளுமன்றத்தில் பொருத்த சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் மோடி.
சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்க உதவும். ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு எனது நன்றி என்றும் தெரிவித்தார். மேலும் இந்த ஹேக்கத்தான் மூலம் ஒரு புதிய கேமராவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் கூட்டத்தில் யார் யார் பேச்சை கவனிக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியும். இந்த கேமராவை நான் நாடாளுமன்றத்தில் பொருத்தலாம் என சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக பேசினார். மோடியின் இந்த பேச்சை கேட்டதும் அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.