தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் நாளை (22 ஆம் தேதி) சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் யாரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
அதன்படி, முதல்வர் பழனிசாமி பிரதமரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் நாளை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவித்தார். அதேபோல் மெட்ரோ ரயில்கள், லாரிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டு, வரும் 31 ஆம் தேதி வரை பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தொலைபேசியில் முதல்வர் பழனிசாமியிடம் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.