பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் ஒலியும் தொலைபேசியில் தங்களுடைய சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு பேசினர்.
இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியும் இந்திய சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை அலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் ஒலி தங்கள் நாட்டின் சார்பாக இந்தியா மக்களுக்கும், அரசுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமில்லா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கும் ஒலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
சுதந்திர வாழ்த்து கூறிய நேபாள பிரதமர் ஒலிக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்த பின், மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை கொடுக்க தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர். மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தரும் என பிரதமர் மோடி நேபாள பிரதமர் ஒலியிடம் உறுதியளித்து பேசினார். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் எல்லை பிரச்சனையில் இந்தியா-நேபாளம் இடையே சென்ற சில வாரங்களாக கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.