பிரதமர் மோடி கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்
கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு 13 மற்றும் 14 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முன்னதாக இந்திய விமானங்கள் எல்லை பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் பரப்பு வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் அவ்வழியாக செல்வதற்கு இந்தியா கேட்டுக்கொண்டதையடுத்து பாகிஸ்தான் அனுமதியை ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் இந்தியா தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. நீண்ட நேரம் மற்றும் தூரம் என்றாலும் பரவாயில்லை, பாகிஸ்தான் வான் வழியே செல்லாமல், ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியே பிரதமர் மோடியின் விமானம் கிர்கிஸ்தான் செல்லும் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலையில் கிர்கிஸ்தான் தலை நகர் பிஷ்கேக்குக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். மேலும் மாநாட்டில் பங்கேற்க செல்லும் மோடி பாக்.பிரதமர் இம்ரான் கானை சந்திக்கமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது