சென்னை ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் இந்தியா- ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சி ஐஐடிவளாகத்தில் நடைபெறுகிறது . அதை தொடர்ந்து 11: 40 மணியளவில் ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட தொண்டர்கள் வரவேற்றனர். அதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.