Categories
தேசிய செய்திகள்

திருச்சி கூட்ட நெரிசல் 7 பேர் பலி….. பிரதமர் மோடி இரங்கல்….!!

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

எனவே இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிடிக்காசை கோவில் பூசாரி பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போது, அதை வாங்குவதற்கு கூட்டம் பெருகியது. கட்டுப்படுத்த ஆள் இல்லாத சூழ்நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிய பொழுது கீழே விழுந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கீழே விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமாக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்ட மோடி  பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் , நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் , காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும்  வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |