குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்தில் மட்டும் தேதியை அறிவிக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது சவாலான ஒன்றாக இருக்கும் என மேலிடம் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் குஜராத் மாநிலத்தில் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு 2 சிலிண்டர்கள் இலவசம் என அமைச்சர் ஜித்து வாகன் அறிவித்தார். இதனால் 38 லட்சம் இல்லத்தரசிகள் பயனடைவார்கள் என்றும், அவர்களுக்கு, 1700 கோடி ரூபாய் வங்கி கணக்கில் அனுப்பப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஆதங்கத்துடன் பேசி வருகிறார். அதோடு வரி பணங்கள் எல்லாம் தேர்தல் சமயத்தில் இலவச திட்டங்கள் ஆக போகிறது என வரி செலுத்துபவர்கள் வருத்தப்படுகிறார்கள் எனவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
அதாவது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் வீட்டு வசதி திட்டங்களை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அப்போதுதான் இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது என்று கூறினார். அதோடு இலவசத் திட்டங்களால் வரி செலுத்துவோர் கடுமையாக வருத்தப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி இப்படி இலவச திட்டங்களை கண்டித்து பேசும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மட்டும் இரண்டு சிலிண்டர்களை எப்படி இலவசமாக கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வரி செலுத்துபவர்கள் வருத்த பட மாட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இலவச திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றமே விளக்கம் அளித்துள்ள நிலையில், 2 திட்டங்களையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.