ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்
கொரோனா பற்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1200க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்வீடன் இளவரசி சோபியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார். ஆன்லைன் மூலம் மூன்று நாள் பயிற்சியை முடித்துவிட்டு தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருக்கும் சோபியாஹேமட் மருத்துவமனையில் தனது சேவையை தொடங்கியுள்ளார். மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள சோபியா நோயாளிகளை நேரடியாக கையாள மாட்டார்.
அதேநேரம் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார். மருத்துவமனையின் ஆன்லைன் பயிற்சியில் சுகாதாரம் குறித்த பயிற்சி, சமையலறையில் வேலை செய்தல், கிருமிகளை நீக்குதல் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கப் படுகின்றது. இந்த பயிற்சியை முடித்தவர்கள் சுகாதார ஊழியர்களின் பணி சுமையை குறைக்க முடியும். அதன் காரணமாக வாரத்திற்கு 80 பேர் வீதம் தன்னார்வலர்களுக்கு பயிற்சியை வழங்கி வருகிறது மருத்துவமனை.
தனது முதல் நாள் பணியினை புகைப்படமாக இளவரசி சோபியா இணையத்தில் பகிர்ந்துள்ளார். முன்னாள் மாடல் அழகியான சோபியா 2015ஆம் ஆண்டு சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் என்பது குறிப்பிடத்தக்கது.