தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தேசிய மக்கள் தொகை கணக்கிடும் பணிநிறுத்தி வைக்கபட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்ற கோரி எதிர்கட்சிகள் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீர்த்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பணிகளில் சேரும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி தகுதியை நிர்ணயிக்க புதிய குழு அமைக்க சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.