போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சிறைக் கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் கிடைத்த தகவலின் படி சின்னசேலம் போலீஸ் ஏட்டுகள் முஸ்தபா, சிவராமன், சுப்பிரமணியண் ஆகியோர் நாமக்கல் கிளை சிறையில் இருந்த சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் ஆகியோரை விசாரணை செய்வதற்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளார். ஆத்தூர் பஸ் நிலையம் வந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கைதி சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இதனை அடுத்து அவரை அழைத்துக்கொண்டு ஏட்டு முஸ்தபா கழிவறைக்கு சென்றபோது முஸ்தபாவை சக்கரவர்த்தி பலமாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் படுகாயமடைந்த முஸ்தபா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் மற்றொரு கைதியான சௌந்தர்ராஜனை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். தப்பி ஓடிய கைதியை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.