பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசா வழங்கும் திட்ட விவரங்கள் குறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் அங்கு லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு வந்தது. இதனால் எரிபொருள் உட்பட அனைத்துப் பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வுகாண ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 5 ஆயிரம் பேருக்கு தற்காலிக விசா கொடுக்கும் திட்டத்தை பிரித்தானியா அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டியளித்தபோது பிரித்தானியா வர விண்ணப்பித்துள்ள ஓட்டுநர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளார்.
அப்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது “பிரித்தானியாவுக்கு வருவதற்கு விருப்பம் இருக்கும் ஓட்டுநர்களின் விவரங்களை வழங்குமாறு போக்குவரத்துத் துறையினரிடம் விவரம் கேட்கப்பட்டது. அதன்படி இதுவரை மொத்தம் 127 ஓட்டுநர்கள் மட்டுமே பிரித்தானியாவுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக உலகம் முழுவதும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தெரிகிறது” என அவர் கூறினார். ஆனால் வெறும் 27 ஓட்டுநர்கள் மட்டுமே தற்காலிக விசா வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து இருப்பதாக டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.