கொரோனா தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடி சிகிச்சை முறை பயனளிக்கும் என்று MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் ஆய்வகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபாடிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் வைரஸை எதிர்த்து போராடக்கூடிய சிகிச்சைக்கு மருத்துவ மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனமான MHRA ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து Regeneron மற்றும் Roch ஆகிய ஆய்வு நிலையங்கள் இணைந்து ஆன்டிபாடி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் Ronapreve என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை ஊசி அல்லது நரம்பு வழியாக செலுத்த முடியும். இதனால் நோய்களை தடுக்கவும், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் அளவையும் குறைக்க முடியும் என்று MHRA நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு முன்னாள் அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்பிற்கு அளிக்கப்பட்ட சோதனை மருந்துகளின் தொகுப்பில் இதுவும் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டது. இந்த மருந்தின் விலையானது மிகவும் அதிகம். அதிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த மருந்தானது அளிக்கப்படவுள்ளது. இது குறித்து பிரித்தானியா சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த ஆன்டிபாடி சிகிச்சையானது கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்காக கிடைக்கப்பெற்றுள்ள பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. இது எங்களுக்கு கூடுதல் உதவி அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.