மே 11 முதல் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாசிய கடைகள் தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.
மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல பெட்ரோல் பங்க் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம். சென்னையை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதி அளித்துள்ளனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11ம் தேதி முதல் டீ கடைகளை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்; நின்றோ, அமர்ந்தோ உட்கொள்ள அனுமதி கிடையாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி கிடையாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும்வரை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.