டிரான்ஸ்பார்மரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன அதிகாரி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு காஜா நிஜாமுதீன் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரது காரானது பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சாந்தி நகர் வ.உ.சி தெருவின் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இதனை அடுத்து டிரான்ஸ்பார்மரில் சிக்கியிருந்த காரை வெளியே எடுக்கும் முயற்சியில் காஜா நிஜாமுதீன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது.
மேலும் அந்த தீயானது வேகமாக கார் முழுவதும் பற்றி எரிந்ததால் காஜா நிஜாமுதீனால் வெளியே வர இயலவில்லை. இதனால் காரினுள் சிக்கிக்கொண்ட காஜா நிஜாமுதீன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை காவல் துறையினர் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் காஜா நிஜாமுதீனின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.