10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும், எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது 10ம் வகுப்பு மதிப்பெண்களை காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை அடிப்படையில் நிர்ணயம் செய்ய உள்ளனர்.
இதனால் மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை இன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில் நிலையில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது. அதிக மதிப்பெண் வழங்க 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்பதாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.