நாளை கர்நாடக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அனைத்தும் 70% கல்வி கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம், கர்நாடக ஐசிஎஸ்இ பள்ளிகள் சங்கம், கர்நாடக பிரைமரி மற்றும் செகண்டரி பள்ளிகள் சங்கம், கர்நாடக நிதி உதவி பெறாத பள்ளிகள் சங்கம் ஆகியவை ஒரு நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஃப்ரீடம் பார்க் வரையிலும் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டத்தில் 70 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இதையடுத்து நாளைய தினம் அனைத்து தனியார் பள்ளிகளிலும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறாது. இதற்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.