மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி 3 நாட்களாக ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி நாடு முழுவதும் இருக்கக்கூடிய 41 படைக்கலன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் தற்பொழுது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையை சேர்ந்த ஊழியர்கள் ஆலைக்கு வெளியே குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து தொழிற்சங்க தலைவர்கள் பேசுகையில், துப்பாக்கி தொழிற்சாலையில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டிணைந்து மூன்றாவது நாளாக இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.
தனியார்மயமாக்குதல் என்கிற முடிவை அரசாங்கம் திரும்பப் பெறும்வரை போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் அரசாங்கத்தோடு தொழிற்சங்கத்தை சேர்ந்த சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, சாதகமான முடிவு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தீர்வு கிடைக்காத பட்சத்தில் நிச்சயமாக இந்த போராட்டம் தொடந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்றுதெரிவித்தனர்.