குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் உத்தரப் பிரதேசக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்ற பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவரின் வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உத்தரப் பிரதேச அரசு உணர்ச்சியற்று செயல்படுகிறது. சதாப்பின் குழந்தைகள், அவரது வயதான தாயாரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்’ என்று பதிவிட்டிருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தை சதாப் ஜாபர் ஃபேஸ்புக் நேரலையாக ஒளிபரப்பினார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகின்றன. முன்னதாக பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கைதான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலர் எஸ்.ஆர். தராபுரியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து பேசிய பிரியங்கா, “77 வயதான தாராபுரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை உத்தரப் பிரதேச அரசு சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளது” என்றார். மேலும், தாராபுரி குடும்பத்தினரை சந்திக்கச் சென்றபோது, காவலர்கள் தம்மை தடுத்து நிறுத்தியதாகவும், பெண் காவலர் ஒருவரால் கழுத்தைப் பிடித்து இழுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.