இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ தொழில்நுட்ப நிறுவனம், ’பெகாசஸ்’ என்ற மால்வேரை (Pegasus malware) அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி அவர்களை உளவு பார்த்ததாகக் கூறி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனிடையே, வாட்ஸ்அப் செயலி மூலம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரபுல் படேல், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் அதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “பிரியங்கா காந்தியின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதென அவருக்கு குறுந்தகவல் வந்தது. இது குறித்து அரசுக்குத் தெரியும் என்பதை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஒருமுறைகூட தெரிவிக்கவில்லை. பிஐபியில் (Press Information Bureau) கூட இது குறித்த செய்தி வெளியாகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி இதுபேன்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.’பெகாசஸ்’ குறித்து அரசிடம் முன்னரே கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருந்ததாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்தக் கடிதங்கள் தெளிவில்லாமல் இருந்ததாக அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.