அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வார நிறைவு விழாவை முன்னிட்டு சிறந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையத்தில் விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மண்டல பொது மேலாளர் சிவலிங்கம் என்பவர் தலைமை தாங்கினார். இதனை அடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா, போக்குவரத்து கழக அதிகாரிகள் சுப்பிரமணியன், மாரிமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, ரோட்டரி சங்க தலைவர் வடிவேல் மற்றும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம் போன்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிலையில் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா வாகன ஓட்டிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ விபத்துக்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய சிறந்த ஓட்டுனர்களாக தேர்வு செய்யப்பட்ட சுப்பையன், செந்தில்குமார், ரகுபதி போன்றோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனைத்தொடர்ந்து பயணிகளுடன் கனிவாக நடந்து கொண்ட சிறந்த நடத்தினார்களாக தேர்வு செய்யப்பட்ட வெல்முருகன், மாரிமுத்து, நெல் ராஜ் போன்றோருக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.