சென்னையில் காதில் பிரச்சனை என்று சென்ற சிறுமிக்கு மருத்துவர்கள் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காது மடல்களில் சிறிய கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அம்பத்தூரில் உள்ள சர் ஐவன் ஸஃபோர்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அன்று சீரமைக்க தொடர் பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு சிறுமிக்கு தொண்டை அறுவை சிகிச்சை என எழுதப்பட்டு இருப்பதை பார்த்து செவிலியராக பணிபுரியும் அவரது உறவினர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவ கையேடுகளில் காது மடல்களில் கட்டியை அகற்றுவதற்காக காதுக்கான அறுவை சிகிச்சை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை முடித்து வெளியே வந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது முதலில் சமாளித்த மருத்துவர்கள் பின்னர் தவறுதலாக அறுவை சிகிச்சை மாற்றி செய்து விட்டதை ஒப்புக் கொண்டதாக சிறுமியின் உறவினர்கள் கூறுகின்றனர்.
தொண்டையில் உள்ள சதைப் பகுதிகளை லேசர் மூலம் நீக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அறுவை சிகிச்சை மாற்றி செய்யப்பட்டு விட்டதாக தகவல் பரவியதை அடுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உறவினர்கள் ஆத்திரமாக பதிலளிக்க கூறிய மருத்துவமனை உரிமையாளர்களிடம் முறையிட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.