டாஸ்மாக் கடையை திறப்பது பணம் மற்றும் பதவிக்காக செய்யும் செயலாகும் என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேலாக மதுபான கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மூடிக் கிடந்தது. இந்நிலையில் வருகின்ற மே 7-ஆம் தேதி தமிழகத்தில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, மது பிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஆனால் இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும் குடும்பப் பெண்களும் தொடர்ந்து கண்டனங்களை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆடவர் படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் செயல் பேரவை தலைவருமான சிவக்குமார் ஆதங்க பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாமை செய்வதுபோல்,
ஆளுமையில்லா ஆட்சியில் பதவிக்காகவும், பணத்திற்காகவும் மக்களை ஆட்சியாளர்கள் விழி பிதுங்க செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கு காலத்தில் கோவில்களை திறக்கக்கூடாது என மூடிவிட்டு, நாற்றமடிக்கும் மதுக்கடைகளை திறப்பது என்ன ஞாயம் இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.