லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் ‘Production Number 1’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளிவெங்கட், நடிகை கோவை சரளா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். கடந்த இரண்டாம் தேதி இப்படத்திற்கான பூஜை நடைபெற்ற நிலையில், தற்போது படம் பற்றிய சுவாரஸ்யமான கூடுதல் தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரூ.10 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் இப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது பாடல் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் ஒவ்வொரு காட்சியிலும் சரவணனின் நடனத்தைப் பார்த்து வியந்துபோன நடனக் கலைஞர்களும் கை தட்டி பாராட்டியுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்களில் தமன்னா, ஹன்சிகா மோத்வானி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்த லெஜண்ட் சரவணன் முதன் முறையாக சினிமாவில் நடித்துவருவதை ரசிகர்கள் ஆரவாரத்தோடு வரவேற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.