போலி திருமண சான்றிதழ் தயார் செய்து கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் அந்தக் கல்லூரியில் இரண்டாமாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவி மீது காதல் கொண்டுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி வந்த சதீஷ்குமார் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மாணவிக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
அப்போது மாணவி சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். இந்நிலையில் மாணவியின் குடும்பத்துடன் நண்பர் போல் பழகிய சதீஷ்குமார் மாணவியின் சான்றிதழை திருடி இருவருக்கும் திருமணம் ஆனது போல் போலியான சான்றிதழை தயார் செய்து அதை மாணவியின் உறவினர்களுக்கு அனுப்பி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லையென்றால் மாணவியின் வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்து போலி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, போலியான ஆவணங்கள் புனைதல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.