மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் போலீசாருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, அங்கிருந்த ஒரு வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அங்கு உள்ள அறைகளில் சோதனை நடத்திய போது, இரண்டு பெண்கள் அங்கு இருந்ததை போலீசார் பார்த்தனர். அதன் பின் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் சென்னை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வசிப்பவர்கள் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் நாகர்கோவிலுக்கு வந்ததாக கண்ணீருடன் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஓமலூர் பகுதியில் வசித்துவரும் தினேஷ் என்பதும், இந்த தொழிலுக்கு அவர் புரோக்கராக செயல்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மசாஜ் சென்டர் தொடங்குவதாக இங்கு அறை எடுத்ததாகவும், குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாலிபர்கள் இங்கு வந்து சென்றதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தினேசை கைது செய்த போலீசார், அந்த இரண்டு பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஒரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.