விபத்தில் சிறுமி காயம் அடைந்ததால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கருப்பூர் பகுதியில் பிரான்சிஸ் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற 10 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றுவிட்டு பிரதீபா சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது சேலத்திலிருந்து சோமரசம்பேட்டை பகுதிக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரியானது இந்த சிறுமியின் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து பெரிய கருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் உள்ள சாலையில் பொதுமக்கள் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஜீயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேகத்தடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.