டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாயிகள் சங்க மணிக்குமார் இதற்கு முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி என்பவர் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் தாலுகா செயலாளர் முத்துராஜ், ராமராஜ் மற்றும் கோவிந்தன் போன்ற விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூரிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான லிங்கம் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் ராஜபாளையம் நகர செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் குருசாமி, இராமர், ஒன்றிய செயலாளர் வீராசாமி, விவசாய சங்க பிரதிநிதி ராமச்சந்திர ராஜா போன்ற 50 பேர் கலந்துகொண்டு டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இவர்களால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.