சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.
இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் குடியிருப்புகளை அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக தீ விபத்தின் போது அந்த குடியிருப்புகளிலிருந்து மக்களால் வெளியேற முடியவில்லை.
அந்த தீ விபத்தில் சிக்கி பத்து நபர்கள் பலியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். சனிக்கிழமை அன்று இரவில் மக்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்தை எதிர்த்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
அதிபர் ஜி ஜின்பிங்கை எதிர்த்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். எனினும் அம்மாகாணத்தின் பல பகுதிகளில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.