பிரான்சில் கொண்டுவரப்பட்ட புதிய கொரோனா சட்டத்தை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் அதிகரித்திருக்கிறது.
பிரான்ஸிலுள்ள லியோன், பாரிஸ், லில்லி மற்றும் மார்சேய் போன்ற இடங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், நாட்டில் பரவும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
அந்த வகையில், சுகாதார பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே, திரையரங்கங்கள், உணவகங்கள் மற்றும் பார் ஆகிய இடங்களுக்கு செல்ல முடியும் என்று அறிவித்தார். இதனால் கோபமடைந்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு சுமார் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கிறது என்று எதிர்க்கிறார்கள். மேலும் இந்த போராட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் பிரான்சின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் ஆங்லெட்டில் இருக்கும் மையம் ஒன்றை பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் பார்வையிட்டார்.
அப்போது கொரோனாவை எதிர்க்கும் சிறந்த மருந்து தடுப்பூசி தான். தற்போதுள்ள ஒரே வழியும் அது தான். எனவே அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் சுகாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான சிறந்த வழியும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான்.
சில மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும், நாட்டில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்திற்கு சம்மதித்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.