அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தீடிரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மண்டல தலைவர்கள் கடலூர் ஜான் விக்டர், திருவண்ணாமலை சேகர் மற்றும் மண்டல பொதுச்செயலாளர்கள் வேலூர் ரவிச்சந்திரன், விழுப்புரம் ரகோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாநில துணைத்தலைவர்களான நந்தகோபால், அன்பழகன், பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். அப்போது தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள 35 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஜோசப்டயஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தொழிலாளர்களிடம் பிடித்த நிலுவைத் தொகையில் உள்ள பணத்தை தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை விரைவில் எடுப்பதாக கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.