கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதாவது 200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதனை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட கோரி முருங்கத்தொழுவு ஊராட்சி, தளவுமலை அருகில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது முருங்கத்தொழுவு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி என்பவர் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து திருப்பூர், ஈரோடு கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த கீழ்பவானி கால்வாய் மூலம் பாசனம் பெறுகிறது எனவும், இவ்வாறு கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடிநீர் தடைபட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர். இவ்வாறு பல லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதால், இந்த திட்டத்தை கைவிட்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விவசாயிகளின் கண்டுகொள்ளாமல் திட்டத்தை செயல்படுத்தினால் கீழ்பவானி பாசன வசதிகள் பாலைவனமாவதுடன், ஆயிரக்கணக்கான கரைகளில் உள்ள மரங்கள் வெட்டப்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகி ரவி கூறும் போது, இயற்கைக்கு முரணாகவும், நீர்க்கசிவு திட்டங் களுக்கு எதிராகவும் உள்ள இந்த பணிகளை அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.