குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள விளாச்சேரி, கலைஞர் நகர், மொட்டமலை போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காசு கொடுத்து லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்குகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.