விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என வக்கீல்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்தபடி நீண்ட வரிசையில் நின்று கொண்டு மைக்கல் அம்பேத்கர் தலைமையில் பட்டி முருகன், பூமாலை குமாரசாமி, சிவாஜி, புஷ்ப தேவன் ரவி, சிவகுமார் போன்றோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வக்கீல்கள் கூறும்போது, விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேப்பூர், திட்டக்குடி, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விருதாச்சலத்தில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வணிகர்கள் ஆதரவு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.