லாரிகளுக்கான வாடகை 30 சதவீதமாக உயர்த்தப்படாததால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உரத் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையம்போன்ற இடங்களில் லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த காரணத்தால் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தனியார் நிலக்கரி மற்றும் உரம் போன்றவை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து 62 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் நிலையில், லாரிகளின் வாடகை இன்னும் உயர்த்தப்படாததால் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே லாரிகளுக்கு 30 சதவீத வாடகை உயர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து வருகிற 8 ஆம் தேதி இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.