குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறையினர் காடுவெட்டி பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமான பணிக்காக அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடுகளை காலி செய்யும்படி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகள், முதியவர்கள் என குடும்பத்துடன் காடுவெட்டி பகுதியில் உள்ள கல்லூரி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த போராட்டத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு அவர்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, அவர்கள் அப்பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதாகவும், அப்பகுதியில் வசித்து வரும் சர்வே எண்ணில் பலருக்கு பட்டா வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தங்களுக்கு மட்டும் பட்டா வழங்காத காரணத்தால் அதனை வழங்க ஏற்பாடு செய்யுமாறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேம்பால பணிக்காக போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாத குடியிருக்கும் பகுதிகளை அரசு எடுக்க திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளனர். மேலும் தாங்கள் வசிக்கும் வீடுகளை இடித்தால் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, அடையாள அட்டை என அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்து விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.