நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாற்றுபாலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் மற்றும் பொதுப் பாதை ஆகியவற்றை மறைத்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய அலுவலகக் கட்டிடத்தின் சுற்று சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார் போன்றோர் பொதுப்பாதை மற்றும் குடிநீர் குழாயை விடுத்து கட்டிடம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளனர். ஆனால் அதனை நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளவில்லை.
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து திருச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பஞ்சவர்ணம் குமார் தலைமையில் ராஜபாளையம்-ராமேஸ்வரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.