அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். அதாவது ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், பஞ்சாயத்து எழுத்தர் மற்றும் வனத்துறை காவலர் போன்ற பணிகளில் உள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து 9 மாத காலமாக வழங்கப்படாத குடும்பநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல நிதியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு செங்கோட்டையில் இருந்து பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சலீம் முகமது மீரான் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு துணை தலைவர் அருணாசலம் என்பவர் வரவேற்புரை அளித்ததை அடுத்து, மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி நாயனார் கோரிக்கைகளை குறித்து பேசியுள்ளார்.
இந்த போராட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் காந்தி, துணைத்தலைவர் சங்கரி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கருப்பையா, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வூதியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் சுவாமிநாதன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நாராயணன் போன்ற பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் தொடக்க உரை அளிக்க, மாவட்ட துணைத்தலைவர் பாலுசாமி இறுதி உரையாற்றியுள்ளார். அதன்பின் மாவட்ட இணை செயலாளர் சின்னதம்பி நன்றியுரை கூறி உள்ளார்.