தேர்வு கட்டணத்தை மீண்டும் செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டதால், தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு மீண்டும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்கள் தேர்வு எழுத எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனால் மீண்டும் தேர்வு கட்டணத்தை செலுத்த இயலாது எனவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காலை 11 மணி முதல் மதியம் 12:45 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்கு பிறகும் கல்லூரி நிர்வாகம் தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களை வற்புறுத்தினால் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் காட்டு மன்னார்கோவில் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளும் கல்லூரி நிர்வாகம் தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.