பணிநிரந்தரம் செய்ய வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழக அரசு பணியாளர்களாக தங்களை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஷிப்டு முறையில் பணிபுரியும் தாங்கள் நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்வது, சுத்தம் செய்வது போன்ற பல்வேறு வேலைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் தங்களுக்கு செய்து தராத காரணத்தினால் கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே பல்வேறு சிரமங்களை கடந்து வந்து வேலை பார்க்கும் ஒப்பந்த பணியாளர்களை அரசு பணியாளர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு மருத்துவமனை டீன் விமலா பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.