Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலும் பொறுக்க முடியாது… சடலத்துடன் சாலை மறியல்… அதிகாரிகளின் உத்தரவாதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இறந்த சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டு காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குமரேசன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காலனிக்கு அருகே உள்ள விவசாய கிணறு அருகே குமரேசன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான்.

இதனை பார்த்த அவரது பெற்றோர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் சிறுவனை மீட்க இயலாததால் உடனடியாக நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர தேடுதலுக்கு பின்பு குமரேசனின் உடலை மீட்டனர். இந்த கிணற்றில் ஏற்கனவே இரண்டு பேர் தவறி விழுந்த நிலையில், இந்த விவசாய கிணறு சுற்றி வேலி அல்லது சுற்று சுவரை அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குமரேசன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததால் கோபமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கிணற்றை மூடி, அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சிறுவன் குமரேசன் உடலுடன் வேலூர்-நாமக்கல் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவள்ளி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் போன்றோர் விரைந்து வந்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். பொதுமக்கள் திடீரென சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |