நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 20 – நாட்களாக சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும் வீட்டிற்குள் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்து நோய் வர அதிகளவில் வாய்ப்புள்ளது என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு தங்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.