மியான்மரில் போராட்டக்காரர்கள் அரசாங்க வலைதளங்களை ஹாக் செய்ததால் ராணுவம் இணைய சேவையை முடக்கியுள்ளது.
மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மியான்மர் ராணுவம் செய்த இந்த செயலால் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்தது. இதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தலைவர் ஆங் சான் சூகி விடுவிக்க முயற்சி செய்து வருகின்றனர். இப்போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 495 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக “மியான்மர் ஹாக்கர்” என்னும் ஒரு குழு ராணுவ ஆட்சிக்கு எதிராக மத்திய வங்கி, ராணுவத்தால் நடத்தப்படும் பிரச்சார நிறுவனமான ட்ரு நியூஸ் இன்பர்மேஷன் டீம் மற்றும் பிற முக்கிய அரசாங்க வலைத்தளங்களை ஹேக் செய்து வருகின்றனர்.
மேலும் மியான்மர் கப்பற்படையின் தளத்தையும் ஹேக் செய்ய முயற்சித்துள்ளனர். இந்த ஹாக்கிங் குழு தங்களது பேஸ்புக் பக்கத்தில் “நாங்கள் மியான்மரின் நீதிக்காக போராடுகிறோம்” என்று எழுதி பதிவிட்டுள்ளனர். இதனால் மியான்மரில் இணைய சேவையை இராணுவம் முடக்கியுள்ளது.