இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார் 1 மணியளவில் திருச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத காரணத்தினால் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பேருந்திற்காக காத்து நின்றனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த திருச்சி செல்லும் பேருந்தில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதில் பெரம்பலூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 40) என்பவர் பஸ்சில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கிய செல்வராஜ் மீது பேருந்து ஏறி இறங்கிதாள் தொடை மற்றும் வலது கால் நசுங்கியது. பின்னர் பலத்த காயங்களுடன் செல்வராஜை பயணிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பயணி மீது பேருந்து ஏறியதாலும் சரியாண முறையில் பேருந்து இயக்கப்படாததாலும், ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென பேருந்து நிலையத்துக்குள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வந்த திருமங்கலம் உதவி கமிஷனர் சிவகுமார் மற்றும் பஸ் நிலைய மேலாளர் ரகுராமன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . இதைத் தொடர்ந்து திருச்சி, திருவண்ணாமலை, வந்தவாசி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.