பள்ளிக்கு செல்லும் வழியில் மதுபான கடை இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கு பிரச்சனை வருவதாக கூறி கடையின் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீரநல்லூர் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமானவர்கள் மதுபான கடையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கடையை மூட கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள் கூறும் போது எங்கள் கிராமம் மற்றும் சுற்றி அமைந்திருக்கும் கிராமத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் அந்த வழியாக தான் பள்ளிக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதனால் மதுக்கடைகளால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இம்மாவட்டம் கலெக்டரிடம் இது பற்றி புகார் அளித்து இருந்தோம் இருந்தாலும் அரசு மதுபானக்கடை மண்டல மேலாளர் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறியுள்ளார்.