கோடை வெயிலை சமாளிப்பதற்காக அதிராம்பட்டினம் மக்கள் தொடர்ந்து மண்பானைகளை வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை சமாளிப்பதற்காக மக்கள் தொடர்ந்து வெள்ளரி பழம், தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற இயற்கை உணவு பொருட்களை தொடர்ந்து நாடி வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள மக்கள் கோடை காலங்களில் மண்பானைகளை உபயோகிப்பது வழக்கமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தற்போது தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால் அதிராம்பட்டினம் மண்பாண்ட வியாபாரிகள் கிழக்கு கடற்கரை சாலை, பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட் போன்ற பகுதிகளில் மண்பானை விற்பனையை மும்முரமாக நடத்தி வருகின்றனர்.
மேலும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக குடிநீரை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் அதிரம்பட்டினம் மக்கள் அதிக அளவில் மண்பானைகளை வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து மண்பாண்ட வியாபாரிகள் கூறும்போது “நாங்கள் மண்பானைகளை தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். அவற்றை பாதுகாப்பாகவும் மிகுந்த சிரமத்துடன் தயார் செய்து நஷ்டம் ஏற்படாமல் விற்பனை செய்ய வேண்டும். குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போதும் கோடைகாலத்திலும் மண்பானை விற்பனை சூடுபிடிக்கும். இதனால் பெரும்பாலான மக்கள் கோடை வெயிலை சமாளிக்க ஆர்வத்துடன் மண்பானைகளை வாங்கிச் செல்கின்றனர்” என்று கூறியுள்ளனர்.