சென்னையில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் அரசு விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை மக்களின் நலன் கருதி அறிவித்துள்ளது. ஆனால் அதனை மக்கள் ஒழுங்காக கடைபிடிக்காமல், விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துகொள்கின்றனர். அதாவது வெளியில் செல்லும் பொழுது முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துதல், போன்ற முக்கிய வழிமுறைகளை கூட அவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை நினைவூட்டும் வகையில் தற்பொழுது சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்சந்தையில் சமூக விலகலை காற்றில் பறக்கவிட்டு மீன்களை வாங்க மக்கள் கூட்டமாக வந்து சென்றனர். இதேபோல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 300க்கும் மேலான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். மேலும் சென்னை பட்டினப்பாக்கம் மீன்சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்று மீன்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி மக்கள் நடந்து கொள்வதன் காரணம் கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்னும் அவர்களிடம் இல்லை என்பதையே உணர்த்துகிறது.