மாட்டுக் கொட்டகை கட்டித் தரும்படி சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் மாடுகளை பெற்ற பயனாளிகளுக்கு மாட்டுக்கொட்டகை அமைத்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை மாட்டுக்கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே மாட்டு கொட்டகை அமைத்து தரப்பட்டுள்ளது. இதனை குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றுள்ளனர்.
அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சாலை மறியலில் ஈடுபட கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனால் கிராம மக்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.